மகள் காதலனுடன் ஓடி சென்று திருமணம்: கழிவறையில் கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலர் தற்கொலை
|மகள் தன்னை ஏமாற்றிவிட்டு காதல் திருமணம் செய்து விட்டாளே என சுந்தர் மனவேதனையில் இருந்துள்ளார்.
குமரி,
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 50). இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ரூபா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் சுந்தரின் மகள், வாலிபர் ஒருவரை காதலித்தார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இந்த காதலை பெற்றோர் எதிர்த்தனர். படிக்கிற வயதில் படிப்பு முக்கியம், இப்போது காதல் அவசியம் இல்லை என கண்டித்துள்ளனர்.
ஆனாலும் மகளால் காதலை தவிர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காதலனுடன் ஓடிச் சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி வெளிநாட்டில் இருந்த சுந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
தனது ஒரே மகள் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடி போய் காதல் திருமணம் செய்து விட்டாளே என சுந்தர் மனவேதனை அடைந்தார். இருப்பினும் மகளையும், மருமகனையும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார். ஆனாலும் அவர் யாரிடமும் மனம் விட்டு பேசுவதை தவிர்த்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தர் மாடியில் உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதில் சந்தேகமடைந்த அவரது மனைவி மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது கழிவறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதே சமயத்தில் உள்ளே இருந்து முனகல் சத்தமும் கேட்டது. இதனால் பதற்றமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுந்தர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் பிளேடு கிடந்தது.
இதை பார்த்து துடிதுடித்து போன அவரது மனைவி கதறி அழுதார். பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர், சுந்தர் ஏற்கனேவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பாிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கழிவறைக்கு சென்ற சுந்தர் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் காதலனுடன் ஓடி சென்று திருமணம் செய்ததால் முன்னாள் கவுன்சிலர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.