மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்... கரூரில் பயங்கரம்
|கரூரில் மாமியார் தலையில் கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டம் வெட்டுக்காட்டு வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (52 வயது). இவரது மனைவி விஜயலட்சுமி (45 வயது). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளான நிலையில், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் லோகநாதனுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
லோகநாதன் தனது தாய் பாப்பாத்தி (72 வயது) மற்றும் மகன், மகளுடன் வெட்டுக்காட்டு வலசையில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். விஜயலட்சுமி அவ்வப்போது தனது மகன், மகளை பார்ப்பதற்காக வெட்டுக்காட்டு வலசைக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கி செல்வாராம்.
அந்த வகையில் கடந்த 18-ந்தேதி விஜயலட்சுமி தனது மகன், மகளை பார்ப்பதற்காக கணவர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாப்பாத்தியும், விஜயலட்சுமியும் வீட்டில் இருந்து ஆடுகளை மேய்க்க அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் இரவு விஜயலட்சுமி மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். பாப்பாத்தி வரவில்லை. இதையடுத்து லோகநாதன் தனது தாய் பாப்பாத்தியை அக்கம் பக்கத்தில் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாப்பாத்தி ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார். இதைக்கண்ட லோகநாதன் தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சந்தேகத்தின்பேரில், விஜயலட்சுமியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆடு மேய்க்க சென்றபோது, கணவரை பிரிந்து சென்றது தொடர்பாக விஜயலட்சுமிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி கீழே கிடந்த பாறாங்கல்லை எடுத்து அவரது மாமியாரின் தலையில் போட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து, கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.