மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு
|மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முறைப்படி நேற்று அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.
பெங்களூரு:
மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முறைப்படி நேற்று அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.
மைசூரு தசரா விழா
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இந்த தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில், மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நேற்று முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
பெங்களூரு காவேரி இல்லத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவை, மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியான எச்.சி.மகாதேவப்பா, மைசூரு மாநகராட்சி மேயர் சிவக்குமார், மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, மைசூரு போலீஸ் கமிஷனர் ரமேஷ் சந்தித்து மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும்படி முறைப்படி அழைப்பிதழ் கொடுத்தனர்.
ஜம்பு சவாரி ஊர்வலம்
அதை முதல்-மந்திரி சித்தராமையா பெற்றுக் கொண்டார். மேலும் தசரா விழாவில் தான் கலந்து கொள்வதாக அவர் உறுதி அளித்தார். ஒவ்வொரு வருடமும் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தை முதல்-மந்திரி தான் தொடங்கி வைப்பார். அதன்படி 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்திருந்தார். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏறபட்ட நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்து சித்தராமையா முதல்-மந்திரியாகி உள்ளார். அவர் 2-வது முறையாக முதல்-மந்திரியான நிலையில் மீண்டும் ஜம்பு சவாரி ஊர்வலத்தை இந்த ஆண்டு தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.