< Back
மாநில செய்திகள்
தாசநாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு
சேலம்
மாநில செய்திகள்

தாசநாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு

தினத்தந்தி
|
11 July 2023 1:00 AM IST

தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய வார்டு உறுப்பினர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.

தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய வார்டு உறுப்பினர்கள் முடிவு எடுத்து உள்ளனர். இது குறித்து கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தாசநாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சிலர் நேற்று கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு மனு கொடுத்து உள்ளனர். ஊராட்சியில் நடந்த வரவு-செலவு கணக்குகளை கேட்டால் சரியான பதில் இல்லை. எனவே ஊராட்சியில் தாங்கள் நேரில் ஆய்வு நடத்தி முறைகேடுகளை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது,'ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல முறை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை. ஊராட்சி நிர்வாகமும் சரியான பதில் தரவில்லை. எனவே முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளோம்' என்றார்கள்.

தக்காளி பழக்கூடையுடன்..

உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் வினோத்குமார், எடப்பாடி பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலரும் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், சொந்த கார் வைத்திருக்கும் சிலர், வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எங்கள் தொழில் பாதிப்பு ஏற்பட்டு, வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதித்து உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பார்த்திபன் கையில் தக்காளி பழக்கூடையுடன் அவரது இருபுறமும் பாதுகாப்பிற்காக 2 பேர் பொம்மை துப்பாக்கியுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்