மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
|மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
மதுரை,
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.
அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார்.
மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எடப்பாடி பழனிசாமி சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
மதியம் 3 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்படும் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் சென்று அங்குள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சிவகங்கையில் எம்.ஜி.ஆர் வேலுநாச்சியார் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கிறார்.
இன்று மாலை 6 மணியளவில் சிவகங்கை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றுகிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.