< Back
மாநில செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

தினத்தந்தி
|
30 Aug 2023 12:03 PM IST

எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக சேலத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரைக்கு காரில் புறப்பட்டார்.

மதுரை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரம்மாண்ட முறையில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு கடந்த 20-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் அ.தி.மு.க. தலைமை எதிர்பார்த்தது போல தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும், வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்றும் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நேற்று மாலை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் அழகர் கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக சேலத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரைக்கு காரில் புறப்பட்டார். அவர் காலை 8.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு நுழைவாயில் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர். வருங்கால முதல்-அமைச்சர் எடப்பாடியார் வாழ்க, அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க என்று திரண்டு நின்ற தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை கொடுக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதி, முக்குருணி விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள், பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட சம்பவம் மதுரை அ.தி.மு.க. தொண்டர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி பின்னர் காரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகாலை முதலே திரண்டதால் அந்த பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்