< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
31 Jan 2023 12:30 AM IST

பாரம்பரிய முறைப்படி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய மாட்டு வண்டிகளில் பக்தர்கள் படையெடுத்தனர்.

கார்த்திகை உற்சவம்

பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தை மாத கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது.

இதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை 6 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடும், இரவு 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

மாட்டுவண்டிகளில்...

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி வடமதுரை, பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவீதிகளில் ஆடி வந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழு பாரம்பரிய முறையில் மாட்டுவண்டிகளில் நேற்று பழனிக்கு வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பாதயாத்திரை வருவது போல் நாங்கள் பல தலைமுறைகளாக மாட்டு வண்டிகளில் பழனிக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறோம். அதன்படி பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி நேற்று பழனி சண்முகநதிக்கு வந்தோம். அங்கு புனித நீராடிவிட்டு பழனிக்கு வந்து சேர்ந்தோம். பழனியில் சாமி தரிசனம் முடித்த பிறகு மீண்டும் மாட்டுவண்டியில் செல்வோம் என்றனர்.

மேலும் செய்திகள்