சென்னை
ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
|சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி திரளான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை தர்ப்பணம்
முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் என பித்ரு பூஜை அமாவாசை நாட்களில் செய்வது மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பானதாகும். மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய முடியாதவர்கள், கண்டிப்பாக இந்த 3 அமாவாசை தினங்களிலாவது பித்ரு பூஜை செய்து வழிபடுவது அவசியம் என்று கூறப்படுகிறது.
இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்தநிலையில் ஆடி அமாவாசை தினமான நேற்று சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளம், சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில் தெப்பக்குளக்கரை மற்றும் மெரினா கடற்கரை மற்றும் ஆறு, நீர்நிலைகளில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடினார்கள்.
பசுமாட்டுக்கு கீரை
தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு படைத்து விட்டு, அன்னதானம் செய்தனர். பசு மாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் இருப்பதால் கோவில்கள் முன்பு கீரை விற்பனையும் அதிகமாக நடந்தது.
அந்தவகையில் சென்னையில் மெரினா கடற்கரை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளம், சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில் தெப்பக்குளக்கரைகளில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.