< Back
மாநில செய்திகள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கரூர்
மாநில செய்திகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தினத்தந்தி
|
28 July 2022 11:51 PM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை

எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும் இந்த தர்ப்பணம் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிலையில், ஆடி அமாவாசை தினமான நேற்று ஆறுகள் மற்றும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதன்படி கரூரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனையொட்டி காலை முதலே ஏராளமானோர் காவிரி ஆற்றுக்கு வந்து, புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின்னர் வீடுகளுக்கு சென்றதும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

குளித்தலை

ஆடி அமாவாசையையொட்டி குளித்தலையில் உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் நேற்று அதிகாலை முதலே குளித்தலையை சுற்றியுள்ள பல கிராமப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட பலர் வந்திருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் காவிரி ஆற்றங்கரையோரம் இருந்த புரோகிதர்களிடம் சென்று இறந்த தங்களது தாய், தந்தை, தாத்தா, பாட்டி மற்றும் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும், எல்லா நன்மைகளையும் அவர்கள் தங்களுக்கு செய்யவேண்டும் என்று வேண்டி வாழை இலையில் பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் செய்தனர்.இதையடுத்து அவற்றை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். இதனைதொடர்ந்து காவிரி ஆற்றங்கரைக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்த பசு மாடுகளுக்கு தாங்கள் கொண்டுவந்த அகத்திக்கீரையை உணவாக அளித்து வணங்கினார்கள். பலர் ஆற்றங்கரையோரம் உள்ள விநாயகர் கோவில் மற்றும் கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காலை நேரமாக குடும்பத்துடன் எழுந்து காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு தாங்கள் கொண்டு வந்த தர்ப்பணம் செய்வதற்கு கொண்டு வந்த பொருட்களை இலையில் வைத்து தர்ப்பணம் ெகாடுத்தனர். பின்னர் தர்ப்பண பொருட்கள் இருந்த இலையை தர்ப்பணம் பொருட்களுடன் காவிரி ஆற்று தண்ணீரில் விட்டு தரிசனம் செய்தனர். பின்னர் அருகாமையில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வீட்டிற்கு சென்றனர். வீட்டுக்கு சென்ற வர்கள் விரதம் இருந்து படையல் போட்டு பின்னர் படையலில் உள்ள சாதங்களை சுத்தமான இலையில் எடுத்து வைத்து முன்னோர்களுக்காக அந்த சாதத்தை வீட்டின் மேல் உள்ள இடத்தில் காகம் சாப்பிடுவதற்காக வைத்தனர்.

மேலும் செய்திகள்