< Back
மாநில செய்திகள்
யானைக்கவுனியில் துணிகரம்: போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளை
சென்னை
மாநில செய்திகள்

யானைக்கவுனியில் துணிகரம்: போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளை

தினத்தந்தி
|
4 Feb 2023 1:19 PM IST

சென்னை யானைக்கவுனியில் போலீஸ் போல் நடித்து ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடியை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுபரா (வயது 56) மற்றும் ரகுமான் (48). இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் நகை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி சென்னை சவுகார்பேட்டையில் உள்ள மொத்த நகை வியாபாரியிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நகை வாங்கிச்செல்வது வழக்கம்.

அதன்படி நகை வியாபாரிகளான சுபரா, ரகுமான் இருவரும் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக ரூ.1 கோடியே 40 லட்சத்தை பையில் எடுத்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து ஆம்னி பஸ் மூலம் நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் வந்து இறங்கினர். அங்கிருந்து சவுகார்பேட்டைக்கு ஆட்டோவில் சென்றனர்.

யானைக்கவுனி வீரப்பன் தெரு சந்திப்பில் சென்றபோது, அங்கு காருடன் நின்றிருந்த 5 பேர், தங்களை போலீசார் என்று கூறி ஆட்டோவை நிறுத்தி நகை வியாபாரிகள் இருவரிடமும் சோதனை நடத்தினர். அவர்கள் கையில் லத்தி மற்றும் 'வாக்கி-டாக்கி' வைத்து இருந்தனர். இதனால் அவர்கள் மீது வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

பின்னர் நகை வியாபாரிகளிடம் இருந்த ரூ.1 கோடியே 40 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தயாராக நிறுத்தி இருந்த காரில் ஏறி தப்பிச்சென்றனர். அதன்பிறகுதான் அவர்கள் உண்மையான போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போல் நடித்து பணத்தை கொள்ளையடித்து செல்வதும் நகை வியாபாரிகளுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி, பூக்கடை துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், புஷ்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை வியாபாரிகளிடம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச்சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து பணத்துடன் நகை வியாபாரிகள் இருவரும் சென்னை வருவதை நன்கு அறிந்த கொள்ளை கும்பல், அவர்களை அங்கிருந்தே பின்தொடர்ந்து வந்து பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் கேட்டபோது, "கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்