< Back
மாநில செய்திகள்
அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்

தினத்தந்தி
|
24 Aug 2022 10:10 PM IST

பெரும்பாறை மலைப்பாதையில் இயக்கப்படுகிற அரசு பஸ்சில் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

வத்தலக்குண்டுவில் இருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியாக தினமும் காலை 7.15 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை இந்த பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் தான் மலைத்தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் இந்த பஸ்சில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக தடியன்குடிசையில் இருந்து கருப்புசாமி கோவில் செல்லும் சாலை வரை மிகவும் ஆபத்தான 13 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் அனுபவம் மிகுந்த டிரைவர்களால் மட்டுமே பாதுகாப்பாக பஸ்சை இயக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இந்தநிலையில் கூட்டம் அதிகரிக்கும் போது டிரைவர் இருக்கையின் அருகிலும், அவரை சுற்றிலும் பயணிகள் அமர்ந்தும், படிக்கட்டில் தொங்கியபடியும் இந்த பஸ்சில் பயணிப்பது வாடிக்கையாக உள்ளது. அதன்படி நேற்றும் ஏராளமான பயணிகள் அரசு பஸ்சில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். மேலும் அந்த பஸ் ஓட்டை உடைசலாக காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காலை, மாலை வேளைகளில் அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்