திருவள்ளூர்
திருத்தணியில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - பாதி வழியில் நிறுத்தியதால் மறியல் போராட்டம்
|திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். டிரைவர் பாதி வழியில் பஸ்சை நிறுத்தியதால் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி அரசினர் கலைக் கல்லூரி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மேதினிபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு கலைக் கல்லூரி திருத்தணியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
திருத்தணி போக்குவரத்து பணிமனை சார்பாக அண்ணா பஸ் நிலையத்திலிருந்து அரசு கல்லூரிக்கு இயக்கப்படும் பஸ்களில் போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியவாறும், மேற்கூரையின் மீது ஏறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அருங்குளம் செல்லும் பஸ்சில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிலர் படிகளில் தொங்கிக் கொண்டு பயணித்தனர்.
டிரைவர் உள்ளே வரும்படி எடுத்து கூறியும் மாணவர்கள் கண்டுக் கொள்ளாததால் டிரைவர் பாதி வழியில் சென்னை பைபாஸ் சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பஸ் முன்பு நின்றுக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி படியில் பயணம் செய்த மாணவர்களை மாற்றுப் பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் எதிர்காலம் கருதி போக்குவரத்து நிர்வாகம் காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.