< Back
மாநில செய்திகள்
சசிகலாவால் உயிருக்கு ஆபத்து; ஜெ.தீபா போலீசில் புகார்
சென்னை
மாநில செய்திகள்

"சசிகலாவால் உயிருக்கு ஆபத்து"; ஜெ.தீபா போலீசில் புகார்

தினத்தந்தி
|
17 Aug 2023 10:57 AM IST

சசிகலாவால் தனக்கும் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக, ஜெ.தீபா போலீசில் புகார் அளித்து உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லத்தை அவரது மறைவுக்கு பிறகு வாரிசான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ஜெ.தீபா கணவருடன் அங்கு வசித்து வருகிறார்.

சென்னை தியாகராய நகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோவில் பூசாரி ஹரிஹரன் (42). கடந்த 20 வருடங்களாக போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டிட காம்பவுண்ட் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் தினமும் பூஜை செய்து வருகிறார்.

இந்தநிலையில் சுந்திர தினத்தன்று ஜெ.தீபா கொடியேற்ற சென்ற போது பூசாரி ஹரிஹரனோடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூசாரி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஜெ.தீபா மீது புகார் அளித்திருந்தார்.

அதில், 20 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தினமும் பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து வருகிறேன். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அனுமதியுடன் பிள்ளையார் கோவில் மற்றும் சிவன் கோவிலில் பூஜை செய்து வருகிறேன். அதற்கான செலவு மற்றும் சம்பளத்தை மாதந்தோறும் சசிகலா கொடுத்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 15 ஆம் தேதி போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்த ஜெ.தீபா அவரது கணவர் மாதவன் உள்ளிட்டவர்கள் இனி இந்த கோவிலில் பூஜை செய்ய வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என கூறி, பிள்ளையாரின் வெள்ளி கிரீடத்தையும் பறிக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பூசாரி ஹரிஹரன் மீது புகார் அளித்து உள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தீபா, சசிகலா தூண்டுதலால் தான் தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பூசாரி ஹரிஹரன் என்பவர் தான் தன்னை ஒருமையில் பேசியதாக கூறினார்.

சுதந்திர தினத்தன்று தனக்கு முன்னரே போயஸ் தோட்டம் வந்த தன் சகோதரரான தீபக், தான் கொடியேற்றுவதை தடுக்க முயன்றதாக குற்றம்சாட்டிய அவர், சசிகலாவுடன் சேர்ந்துக்கொண்டு தீபக் தனக்கு எதிராக செயல்படுவதாக கூறினார். மேலும் சசிகலாவால் தனது உயிருக்கும் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாகவும் ஜெ.தீபா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்