< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
மாநில செய்திகள்

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

தினத்தந்தி
|
12 Sep 2024 2:14 AM GMT

சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலத்தில் நடைபெற்ற சமூக நீதி விளக்க பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டுக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் தமிழகத்தில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. இதனால் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் போகும் சூழ்நிலை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கையில் எடுக்கும். கணக்கெடுப்பு நடத்துனீர்களா என நீதிபதிகள் கேட்பார்கள், இல்லை என்று சொன்ன மறுநாளே 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அரசுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது?. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல பஞ்சாயத்து தலைவர்கள் கூட நடத்தலாம். சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை.

அனைத்திற்கும் பட்ஜெட் போடும் திமுக அரசு வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு பட்ஜெட் போட முடியாதா?. அனைத்திற்கும் மத்திய அரசை தான் எதிர்பார்க்க வேண்டுமா?. திரைக்கு முன்னால் மட்டுமே மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கை கடைபிடிக்கிறது. திரைக்கு பின்னால் இணக்கமாக உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்