< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்-திருக்கோவிலுார் புறவழிச்சாலையில்  ஆக்கிரமித்து வைத்து உள்ள பொருட்களால் விபத்து அபாயம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம்-திருக்கோவிலுார் புறவழிச்சாலையில் ஆக்கிரமித்து வைத்து உள்ள பொருட்களால் விபத்து அபாயம்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

விழுப்புரம்- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ஆக்கிரமித்து வைத்து உள்ள பொருட்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் பொருட்கள்

விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் மாம்பழப்பட்டு ரெயில்வே கேட் அருகே மரவாடி மற்றும் பழைய இரும்புப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. இந்த கடையின் முன்புற பகுதியில் உள்ள சாலையில் மரங்கள், பழைய இரும்புப்பொருட்களை குவித்து வைத்துள்ளனர். அவற்றில் பெரிய, பெரிய இரும்புத்தூண்களும் உள்ளன.

இதன் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருக்கோவிலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் சர்வீஸ் சாலை செல்கிறது. இந்த சாலையில் எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இரவு நேரங்களில், அப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது.

விபத்து அபாயம்

குறிப்பாக அங்குள்ள சாலையோரம் கிடக்கும் மரபொருட்கள், பழைய இரும்புப்பொருட்களால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறபோதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இதைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. மேலும் அப்பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக எச்சரிக்கை பலகை கூட வைக்கவில்லை என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாம்பழப்பட்டு ரெயில்வே கேட் அருகே எச்சரிக்கை பலகை வைப்பதோடு, சாலையில் கிடக்கும் இரும்புப்பொருட்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்