விபத்துக்கு வழிவகுக்கும் ஆபத்து: பள்ளி, கல்லூரிகள் முன்பு வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
|விபத்துக்கு வழிவகுக்கும் ஆபத்து இருப்பதால், வேகத்தடைகள் இல்லாத கல்வி நிறுவனங்கள் முன்பு வேகத்தடைகள் அமைக்கப்படுமா? என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சாலையை கடக்க சிரமம்
பள்ளி-கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு-தனியார் ஆஸ்பத்திரிகள் அமைந்துள்ள இடங்கள் அருகே சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்படுவது மிக அவசியம் ஆகும். அதே போன்று 'பள்ளி-கல்லூரி அமைந்துள்ள இடம். வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும்' என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த விதிமுறை பல கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள சாலைகளில் பின்பற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக அரசு பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள இடங்களில் இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில், சாலையில் சீறிபாய்ந்து வரும் வாகனங்களுக்கு மத்தியில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் சாலையின் பக்கவாட்டு பகுதியில் நீண்டநேரம் காத்திருந்து மிகவும் கவனத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது.
குறிப்பாக சென்னை கிழக்கு தாம்பரம் இந்திய விமானப்படை நிலையம் செல்லும் சாலையில் தனியார் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, கிறிஸ்தவ கல்லூரி அமைந்திருந்தாலும் வேகத்தடை இல்லாமல் இருப்பது அன்றாடம் விபத்துகளுக்கு வித்திடுக்கும் வகையில் இருக்கிறது.
இதே போன்று சென்னை புழல் 'கேம்ப்'பில் நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும் வேகத்தடை இல்லாமல் இருப்பது ஆபத்தான விஷயமாகபார்க்கப்படுகிறது.
மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
வேகத்தடையின் அவசியம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த டி.விக்டர் ஜோசப்:-
சென்னை கிழக்கு தாம்பரம் இந்திய விமானப்படை நிலையம் செல்லும் சாலை வழியாக ஏராளமான பள்ளி-கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் காலையிலும், மாலையிலும் சென்று வருகிறார்கள். இப்பகுதியில் அமைந்துள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் வெளியே பக்கவாட்டு பகுதியில் ஹீபர் நுழைவுவாயில் அருகே முன்பு ஒரு பெரிய சாலை விபத்து நடைபெற்றது. இதையடுத்து இங்கு உடனடியாக வேகத்தடை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சாலை விபத்துகள் குறைந்தது.
இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக இந்த வேகத்தடை அகற்றப்பட்டது. தற்போது இந்த சாலை நல்ல முறையில் இருப்பதால் மீண்டும் வாகனங்கள் தடை இல்லாமல் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் நேரிடுகிறது. எனவே இங்கு மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட்டால் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும். இதுபற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உறுதுணை
புழல் பொப்பிலிராஜா அரசு பள்ளியின் ஆசிரியை மஞ்சு கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பள்ளிக்கூடத்தில் சிறப்பாக உள்ளது.
ஆனால் பள்ளிக்கூடம் வருவதற்கு சாலையை கடப்பதற்கு மட்டும் மாணவ-மாணவிகள் சிரமம் அடையும் நிலை இருக்கிறது. சாலையை கடக்கும் முன்பு இருபுறமும் வாகனங்கள் வருகிறதா? என்பதை நன்கு கவனிக்க வேண்டும். அஜாக்கிரதையாக சாலையை கடக்க கூடாது என்று தினமும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறி வருகிறோம்.
இந்த சாலையில் வேகத்தடை அமைத்து தந்தால் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.
இந்த பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மோனீஷ், காஜா:-
எங்கள் பள்ளிக்கூடம் அமைந்துள்ள இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருந்து வருகிறது. இதனால் தனியாக சாலையை கடப்பதற்கு பயமாக இருக்கும். யாராவது சக மாணவர்கள் வருகிறார்களா? என்று காத்திருந்து அவர்களுடன் ஒன்றாக சாலையை கடப்போம்.
நாங்கள் கூட்டமாக வருவதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் முன்கூட்டியே வாகனத்தை நிறுத்திவிடுவார்கள். எனினும் சில நேரங்களில் வாகனங்கள் மோதுவது போன்று வரும். அப்போது எங்களுக்கு 'திக்' என்று இருக்கும். வேகத்தடை அமைக்கப்பட்டால் அச்சம் இல்லாமல் சாலையை கடப்போம்.
பெற்றோர்களின் வேண்டுகோள்
புழல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கர்:-
புழல்-அம்பத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் முன்பு வேகத்தடைகள் முறையாக இருக்கிறது. பள்ளிக்கூடத்தின் காவலாளிகளும் போக்குவரத்தை சீர் செய்து மாணவ-மாணவிகள் சாலையை பாதுகாப்பாக கடப்பதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
ஆனால் இந்த அரசு பள்ளிக்கூட மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையே சாலையை கடக்கிறார்கள். சமீபத்தில் மொபட்டில் வந்த பெண்மணி ஒருவர் சாலையை அவசரமாக கடக்க முயன்ற மாணவர்கள் மீது மோதி விடாமல் இருக்க திடீரென்று 'பிரேக்' போட்டு கீழே விழுந்து காயம் அடைந்தார். இதே போன்று அவ்வப்போது சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த சம்பவங்களை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இந்த பள்ளிக்கூடம் முன்பு வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எந்தெந்த கல்வி நிறுவனங்கள் அருகே வேகத்தடை இல்லாமல் இருக்கிறது என்பதை அதிகாரிகள் கள ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடங்களில் வேகமாக வேகத்தடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும் இருக்கிறது.
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் முறையற்ற வேகத்தடைகள்
சாலையில் அமைக்கப்படும் வேகத்தடை 3.7 மீட்டர் அகலம், 10 செ.மீ. உயரம் என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த இடத்தில் வேகத்தடை இருக்கிறது என்பதை வாகன ஓட்டிகள் அறிந்துக்கொள்ளும் வகையில் 40 மீட்டர் தொலைவுக்கு முன்பு எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.
வேகத்தடைகள் இருப்பது இரவிலும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அதன் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்பட வேண்டும். வேகத்தடையையொட்டி ஒளிரும் பட்டை பதிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகளை கடைபிடிக்காமல் சென்னையில் பல இடங்களில் வேகத்தடைகள் முறையற்ற வகையில் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. வர்ணம் மறைந்து போன வேகத்தடைகள் கண்ணுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பதைபதைப்புக்கு உள்ளாக நேரிடுகிறது. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முறையற்ற வேகத்தடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.