< Back
மாநில செய்திகள்
காரைக்குறிச்சி காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

காரைக்குறிச்சி காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா

தினத்தந்தி
|
28 May 2023 12:10 AM IST

காரைக்குறிச்சி காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் காளி ஆட்டம் என்னும் காளியம்மன் திருநடன திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காளி ஆட்டத்தை மிக விமரிசையாக நடத்துவது என்று கிராம முக்கியஸ்தர்கள் முடிவெடுத்ததன்பேரில், கடந்த 24-ந் தேதி காளி ஆட்டம் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காளியம்மன் கோவில் காப்பு கட்டிய உடன் காளியம்மன் சிரசு காளி நடனம் ஆடுபவர் தலையில் வைக்கப்பட்டு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. காளியம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு படுகள குழியில் படுத்திருக்கும் தொழிலாளியை எழுப்பிவிட்டு அங்கு பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விநாயகர் கோவில் முன்பு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் காளியம்மன் நடனம் ஆட திருவிழா களைகட்டத் தொடங்கியது. காளியம்மன் மயிலாட்டம், பாம்பாட்டம் ஆகிய நடனங்களை ஆடியது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. காளியம்மன் நடனம் ஆடியபோது சில பெண்கள் அருள் வந்து காளியம்மன் உடன் இணைந்து ஆடிய காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. காளியம்மன் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று நடனமாடி பக்தர்களுக்கு ஆசி வழங்கி தீபாராதனையை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நாளான நேற்று காளியம்மன் ஊஞ்சலில் அமர்ந்து நடனமாடும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிழாவில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்