சென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை
|தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது.
சென்னை,
திரு.வி.க.நகர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் பருவமழை கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்றுதல், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், மழை நீர் தேங்கியிருந்த 21 இடங்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளித்தல், மின்சாரத் தடை ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு, அமைச்சர் சேகர்பாபு அறிவுரைகள் வழங்கினார்.