< Back
மாநில செய்திகள்
சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?
நாமக்கல்
மாநில செய்திகள்

சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
12 Jun 2023 12:15 AM IST

நாமக்கல் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

28-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 28-வது வார்டில் கொசவம்பட்டி செட்டியார் தெரு, தேவேந்திரபுரம், துறையூர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் 2 ரேஷன்கடைகள் உள்ளன. ஒரு அங்கன்வாடி மையமும், அரசுஉதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது ஆகும்.

இந்த வார்டு கொசவம்பட்டி ஊராட்சியின் ஒரு பகுதியை பிரித்து நகராட்சியுடன் இணைத்து உருவாக்கப்பட்டது ஆகும். எனவே இங்கு பாதாள சாக்கடை திட்டம் அமலில் இல்லை. ஆதலால் கழிவுநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளது.

இந்த வார்டில் 1,020 ஆண்கள், 1,081 பெண்கள் என மொத்தம் 2,101 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட லீலாவதி வெற்றி பெற்றார். நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சேதமான சாலைகள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாச்சலம் கூறியதாவது:-

கொசவம்பட்டி நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இருந்து செட்டியார் தெரு வழியாக மயானம் செல்லும் பாதை, அங்கிருந்து தேவேந்திரர் தெரு வழியாக ரெயில்வே ஜங்சனுக்கு செல்லும் சாலை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. ரெயில்பாதை அமைக்கப்பட்ட பிறகு இந்த பாதை பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. சாலையும் சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே மயானத்திற்கு செல்லவும், ரெயில் நிலையத்திற்கு செல்லவும் இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும்.

இதேபோல் நகர்ப்புற நலவாழ்வு கட்டிடத்திற்கு முன்பு சிலர் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே குப்பைகளை அகற்றவும், மேற்கொண்டு குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மண்சாலைகளையும் சிமெண்டு சாலை அல்லது கான்கிரீட் சாலையாக மாற்ற வேண்டும்.

கழிவுநீர் பிரச்சினை

கொசவம்பட்டியை சேர்ந்த காயத்ரி:-

எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. எனவே கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. விரைவில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆங்காங்கே கழிவுநீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். துறையூர் சாலை மேம்பாலத்தின் இருபுறத்திலும் சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும். தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்