< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும்என்.புதுப்பட்டி- எருமப்பட்டி சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும்என்.புதுப்பட்டி- எருமப்பட்டி சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
6 Oct 2023 12:30 AM IST


பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட என்.புதுப்பட்டியில் இருந்து குரும்பப்பட்டி வழியாக எருமப்பட்டிக்கு தார்சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் இருப்பதால், கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ளது.

அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இந்த வழியாகத்தான் விவசாயிகள் சென்று வர வேண்டும். அத்துடன் கால்நடைகள் மற்றும் வாகனங்கள் மூலம் விதைப்பு பொருட்களை இந்த வழியாக தான் எடுத்து செல்ல வேண்டும். விளைந்த பொருட்களையும் இந்த வழியாக தான் கொண்டு வர வேண்டும். இந்த சாலையில் கால்நடைகள் செல்லும் போது கற்கள் குத்தி கால்நடைகளின் காலில் ரத்தம் வரும் அளவு நிலைமை மோசமாக உள்ளது.

சாலை சீரமைக்கப்படுமா?

இதுதவிர என்.புதுப்பட்டியில் இருந்து எருமப்பட்டி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்தினால், தூரம் குறைவாக உள்ளது. எனவே ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகளை எடுத்து கொண்டு லாரிகள் இந்த வழியாக தான் செல்கின்றன. அவற்றில் ஏராளமான முட்டைகள் உடைந்து விடுவதால், பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக அளவில் பஞ்சர் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கி சிலர் விபத்திலும் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்