< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த மின் கம்பங்கள்
கரூர்
மாநில செய்திகள்

சேதமடைந்த மின் கம்பங்கள்

தினத்தந்தி
|
3 July 2022 12:34 AM IST

மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது.

குளித்தலை பகுதியையும், திருச்சி மாவட்டம் முசிறி பகுதியையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தந்தை பெரியார் பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தில் மின் விளக்கு வசதிக்காக மின்கம்பங்கள் நடப்பட்டு அதில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. மின்கம்பத்தை பொருத்துவதற்காக பாலத்தின் நடைபாதை பகுதியில் இரும்பிலான போல்டுகள் தரைப்பகுதியில் பதிக்கப்பட்டு அதன் மேல் இரும்பிலான மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். மேலும் ஒவ்வொரு மின்கம்பத்தின் அடிப்பகுதியை சுற்றிலும் சுமார் 3 அடி உயரத்திற்கு மின் கம்பத்தை சுற்றிலும் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த பாலத்தில் குளித்தலையில் இருந்து முசிறி நோக்கி செல்லும் வழியின் இடதுபுறம் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் போடப்பட்டிருந்த கான்கிரீட் பாதியாக உடைந்து ஒரு பாதி தரையிலும் மற்றொரு பாதி மின் கம்பத்துடனேயே இருக்கிறது. மேலும் அடிப்பகுதியில் கம்பத்தில் இணைக்கப்பட்டு இருந்த போல்ட்டுகள் உடைந்த நிலையில் உள்ளன. இந்த வழியாக சென்ற வாகனம் மோதியதன் காரணமாக இந்த மின்கம்பத்தின் கான்கிரீட் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த மின் கம்பம் மேலே செல்லும் மின் கம்பியின் இழுதிறன் காரணமாக கீழே விழாமல் உள்ளது. ஆனால் அடிப்பகுதியில் எந்தவித பிடிமானமும் இல்லாத காரணத்தினால் இந்த கம்பம் எப்பொழுது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் உள்ளது. இந்த பாலம் வழியாக தினசரி பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு, தனியார் பஸ்கள் லாரிகள் போன்ற அனைத்து விதமான வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த மின்கம்பம் உடைந்து விழுந்தால் இந்த பாலத்தில் செல்லும் வாகனங்களின் மேல் விழுந்து உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக சேதம் அடைந்த மின் கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்