கள்ளக்குறிச்சி
சேதமடைந்த தொகுப்பு வீடுகள்
|சின்னசேலம் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகள் செந்தில்குமார் எம்.எல்.ஏ.ஆய்வு
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனுமனந்தல், கருந்தலாகுறிச்சி ஆகிய கிராமங்களில் 35 வருடங்களுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமடைந்து மழை நீர் உள்ளே ஒழுகி வருவதால் அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளதாக அங்கு வசித்து வரும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் நேற்று சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது வீ்ட்டின் தற்போதைய நிலை குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டறிந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து அரசு மூலம் புதிய வீடுகள் கட்டி தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னதாக சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்துவோம் என்றார். அப்போது சின்னசேலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாக இயக்குனர் சேகர், சின்னசேலம் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் அருள், நயினார்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.