ராமநாதபுரம்
சேதமடைந்த தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்
|திருவாடானை அருகே கம்பகோட்டையில் சேதமடைந்த தரைப்பாலத்தால் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, உயர்மட்ட மேம்பாலம் கட்டிதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை அருகே கம்பகோட்டையில் சேதமடைந்த தரைப்பாலத்தால் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, உயர்மட்ட மேம்பாலம் கட்டிதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேதமடைந்த பாலம்
திருவாடானை யூனியன் துத்தாக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கம்பகோட்டை கிராமம். இந்த கிராமத்தின் அருகே விருசுழி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் தரைப்பாலம் கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும், பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் தற்போது பாலம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்தில் நெல் மூடைகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் பாலம் முழுமையாக சேதம் அடைந்தது. தற்போது பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.
போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக கட்டி தர வேண்டும் தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் போக்குவரத்து தடைபடாமல் இருக்க தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.
போக்குவரத்து துண்டிப்பு
விரைவில் இப்பாலத்தை மேம்பாலமாக கட்டி தராவிட்டால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபடும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித் தர வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கணேசன் முன்னாள் ஊராட்சி தலைவர், கம்பகோட்டை:- சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தரைப்பாலத்தை கடந்துதான் தினமும் செல்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலம் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது பாலம் முழுமையாக சேதம் அடைந்த நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை
சரளாதேவி, ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு தலைவி, செகுடி கிராமம்:- கவலை வென்றான் கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் ஆற்றுப்பாலத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். நாங்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கும் இதனை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது பாலம் சேதமடைந்து விட்டதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உடல்நல குறைவு ஏற்பட்டவர்களை அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் இருந்து கண்ணங்குடி வரை செல்லும் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர். இந்த சாலை தற்போது முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலர் துத்தாக்குடி:- தரைப்பாலம் முழுமையாக சேதம் அடைந்து விட்டதால் மேம்பாலமாக கட்டி தர வேண்டும் என்று பலமுறை கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
மெத்தன போக்கு
ரஸியாபானு ராஜா முகமது, ஊராட்சி தலைவர், கவலை வென்றான்:- இப்பகுதியில் உயர்மட்ட பாலமாக கட்டி தர வேண்டும் என கடந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மனுக்கள் அளித்துள்ளோம். ஊராட்சி உதவி இயக்குனரிடம் கேட்டால் நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பாலம் அமைத்து கொள்ள வேண்டும் என கூறுகிறார். யூனியன் அலுவலகத்தில் கேட்டால் நிதி பற்றாக்குறை உள்ளது மாவட்ட நிர்வாகம் தான் இதை செய்து தர வேண்டும் என்று கூறுகின்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை இணைக்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் நிலையை கவனத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் மெத்தன போக்குடன் இருந்து வருகின்றனர். சமீபத்தில் யூனியன் அலுவலகத்தில் இருந்து பாலத்தை சீரமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எனக்கு கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர், யூனியன் தலைவர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.