மழையால் விளைச்சல், வரத்து பாதிப்பு: தக்காளி கிலோ ரூ.100 ஆக உயர்வு
|மழையால் விளைச்சலும், வரத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை,
சமையலில் நாம் பயன்படுத்தும் முக்கிய காய்கறி தக்காளி. தக்காளி இல்லாமல் சமையல் செய்யவே முடியாது.
ஆனால் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஓரிருநாளில்...
சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நகரின் சில பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் காய்கறி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித்து உள்ளது. இதனால் காய்கறி விலை ஓரிரு நாளிலேயே தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-
காரணம் என்ன?
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமான காய்கறி வரத்து மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் ரூ.60-க்கு விற்பனையான (கிலோவில்) அவரை, பீன்ஸ் போன்றவை தற்போது ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. குறிப்பாக ரூ.30 வரை விற்பனையான பச்சை மிளகாய் ரூ.100 வரை விற்பனை ஆகிறது.
அதேபோல தக்காளியின் விலையும் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. புடலை, முள்ளங்கி விலை 2 மடங்காக உயர்ந்திருக்கிறது. இஞ்சி விலை ரூ.20 உயர்ந்து, ரூ.200-ஐ எட்டியிருக்கிறது.
இப்படி பெரும்பாலான காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. மொத்த மார்க்கெட்டிலேயே பல காய்கறியின் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. மழையின் தாக்கம் குறைந்து வரத்து சீராகும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை பட்டியல்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (மொத்தவிலையில்/கிலோவில்)
பீன்ஸ்- ரூ.100 முதல் ரூ.120 வரை, அவரை- ரூ.80 முதல் ரூ.100 வரை, பாகற்காய் (பன்னீர்) - ரூ.60, பாகற்காய் (பெரியது) - ரூ.60, கத்தரி-ரூ.40 முதல் ரூ.60 வரை, வெண்டை-ரூ.60, புடலங்காய்-ரூ.40 முதல் ரூ.80 வரை, சுரைக்காய்-ரூ.35 முதல் ரூ.40 வரை, பீர்க்கங்காய்-ரூ.50, பச்சை மிளகாய்-ரூ.70 முதல் ரூ.100 வரை, பீட்ரூட்-ரூ.50, கேரட் (ஊட்டி) - ரூ.60 முதல் ரூ.80 வரை, கேரட் (மாலூர்) -ரூ.50 முதல் ரூ.70 வரை, முள்ளங்கி- ரூ.50, முட்டைக்கோஸ்- ரூ.25 முதல் ரூ.30 வரை, இஞ்சி- ரூ.200, சாம்பார் வெங்காயம் - ரூ.100 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.25 முதல் ரூ.30 வரை, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.20 முதல் ரூ.25 வரை, தக்காளி- ரூ.80 முதல் ரூ.100 வரை, சேனைக்கிழங்கு- ரூ.55, சேப்பங்கிழங்கு- ரூ.40, காலிபிளவர் (ஒன்று) - ரூ.30 முதல் ரூ.40 வரை, முருங்கைக்காய்- ரூ.40 முதல் ரூ.45 வரை, உருளைக்கிழங்கு- ரூ.30 வரை, எலுமிச்சை- ரூ.70 முதல் ரூ.80 வரை.
கார் வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்ட காரணங்களால் வெளிச்சந்தைகளில் காய்கறி விலை ரூ.15 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.