< Back
மாநில செய்திகள்
குடிநீர் வினியோகம் பாதிப்பு
தேனி
மாநில செய்திகள்

குடிநீர் வினியோகம் பாதிப்பு

தினத்தந்தி
|
16 March 2023 12:30 AM IST

பெரியகுளம் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

பெரியகுளம் நகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு கொடைக்கானல் வனப்பகுதியான பேரிஜம் ஏரியில் இருந்து தண்ணீர் சோத்துப்பாறை அணைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோத்துப்பாறை அணையில் இருந்து மீன் பிடிப்பதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக கலங்கலான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் தேங்கி இருந்த கழிவுநீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றினர். பின்னர் பேரிஜம் ஏரியில் இருந்து அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அங்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் சோத்துப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வந்தது. குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட்டபோது ஷட்டரில் பழுது ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடமுடியவில்லை. இதன்காரணமாக கடந்த 4 நாட்களாக நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளுக்கு குடிநீர் லாரி செல்லவில்லை. அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விரைவில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய பொதுப்பணித்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்