அரியலூர்
சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை சேதம்
|விக்கிரமங்கலம் அருகே சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேற்கூரை சேதம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியரசன் (வயது 30), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
அப்போது பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இதில் தாக்கு பிடிக்க முடியாத மதியரசன் வீட்டின் சிமெண்டு கூரைகள் காற்றில் பறந்து அருகே உள்ள மின் கம்பத்தில் விழுந்து சிதறியது.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இதையடுத்து, மதியரசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது 40 அடி நீளமும், 20 அடி அகலமும் உள்ள மேற்கூரை காற்றில் தூக்கி எறியப்பட்டு கிடந்தது தெரியவந்தது. மேலும் மின்சாதன பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் என ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்தது.சூறைக்காற்று வீசும் போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயி மதியரசன் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.