விருதுநகர்
கிருதுமால் நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதம்
|நரிக்குடி அருேக கிருதுமால் நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருேக கிருதுமால் நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருதுமால் நதி
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வி.கரிசல்குளம் கிராமத்திலிருந்து வயல்சேரி கிராமம் வரை செல்லும் சாலையில் கிருதுமால் நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது இந்த பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது.
மேலும் வைகை அணை நிரம்பியதால் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நரிக்குடி பகுதியான கட்டனூர், இருஞ்சிறை மற்றும் பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கிருதுமால் நதியில் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வி.கரிசல்குளம் கிராமத்தில் இருந்து வயல்சேரி கிராமம் செல்லும் சாலை நடுவே உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த தரைப்பாலம்
பாலம் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ளது. இந்த பாலம் சேதமடைந்து அடித்து செல்லப்பட்டுள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆதலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பாலம் பழுதடைந்ததால் வி.கரிசல்குளம் கிராம மக்கள் திருப்புவனம் செல்ல வேண்டுமானால் தச்சனேந்தல், கல்விமடை, நாங்கூர் வழியாக 10 கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே வி.கரிசல்குளம், தாமரைக்குளம், தச்சனேந்தல் பகுதி பொதுமக்களின் நலன்கருதி உடைந்த தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.