கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழைஅறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை
|கச்சிராயப்பாளையம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கச்சிராயப்பாளையம்
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் கச்சிராயப்பாளையம், வெங்கடாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் வெங்கடாம்பேட்டை கிராம விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் டி.பி.டி. ரக நெற்பயிரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடவு செய்து பராமரித்து வந்தனர். தற்போது இந்த நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
ஆலங்கட்டி மழையால் சேதம்
இதனிடையே கடந்த 2 நாட்களாக கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது வெங்கடாம்பேட்டை உள்ளிட்ட சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற் பயிர்கள் உதிர்ந்து சேதமானது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உரிய நிவாரணம் வழங்கவேண்டும்
எனவே மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண்மை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.