வேலூர்
காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்
|குடியாத்தம் அருகே காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர்கள் சேதம்
குடியாத்தத்தை அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து ஒரு மாதமாக விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். யானைகளுக்கு பயந்து விவசாயிகள் நெற் பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்துவிட்டனர்.
இதனால் பக்கத்து கிராம வனப்பகுதிக்கு சென்ற யானைகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மற்றும் நெற் பயிர்கள், வாழை மரங்களை சேதம் செய்தன. தொடர்ந்து பக்கத்து கிராமமான மேல்அனுப்பு கிராம வனப்பகுதிக்குள் சென்ற யானைகள் நேற்றுமுன்தினம் முனிசாமி என்பவருடைய நிலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெற் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. அதேபோன்று அருகில் உள்ள வனஜா என்பவருடைய வாழை மரங்கள், வேர்க்கடலை பயிர்களையும் சேதப்படுத்தின.
விவசாயிகள் கோரிக்கை
தற்போது மேல்அனுப்பு கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
வனத்துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் யானைகளால் பயிர்கள் சேதம் அடைந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
பேரணாம்பட்டு
அதேபோன்று அரவட்லா மலைப்பகுதி கொத்தூர் கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு நெற்பயிரை மிதித்து நாசப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாஸ்மார் கிராமத்தில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வாழை மரக்கன்றுகள், சந்திரா என்பவருக்கு சொந்தமான வேர்க்கடலை செடிகளை நாசப்படுத்தின. விவசாயிகள் பட்டாசு வெடித்து அருகிலுள்ள காப்பு காட்டிற்குள் யானையை விரட்டினர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் மற்றும் வனத்துறையினர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.