மதுரை
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்- அதிகாரி தகவல்
|காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாப்டூர் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
பேரையூர்
மானாவாரி பயிர்கள்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் உள்பட பல்வேறு மானாவாரி விவசாய பயிர்கள் சாகுபடி தொடங்கியது. தற்போது இந்த பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிலையில் தாலுகாவில் உள்ள காரைக்கேணி, நாகையாபுரம், வண்டப்புலி, அத்திபட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி உள்பட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முக்கியமாக மக்காச்சோள பயிர்களை விவசாய நிலங்களில் அருகில் இருக்கும் கண்மாய் பகுதிகளில் இருந்தும், புதர் பகுதிகளிலும் இருந்து காட்டுபன்றிகள் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. மேலும் மக்காச்சோள செடிகளை உடைத்து விட்டு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு மற்றும் நஷ்டத்தை உருவாக்கி வருகிறது.
நிவாரணம்
இதுகுறித்து சாப்டூர் வனச்சரகர் செல்லமணி கூறியதாவது,
காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு வனத்துறை மூலம் முறையாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாப்டூர் வடகரைப்பட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்யலாம். புகார் மனுவோடு நிலத்தினுடைய உரிமையாளர் பட்டா, அடங்கல், ஆதார் நகல், பாதிப்பு ஏற்பட்ட பயிரின் புகைப்பட நகல் மற்றும் மனுவுடன் விவசாயி புகைப்படம் ஒட்ட வேண்டும், கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற வேண்டும்.
இவற்றை வனத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வனத்துறையினர் நேரடியாக நிலத்துக்கு சென்று ஆய்வு செய்த பின்னர் அது குறித்த தகவலை விருதுநகர் வனத்துறை மாவட்ட துணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் நிவாரணம் விவசாயிகளுக்கு காசோலையாக வழங்கப்படும் என்று கூறினார்.