கோயம்புத்தூர்
குடிநீரில் சாக்கடை கலப்பதால் பாதிப்பு
|அத்திப்பாளையத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது என்று குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மேயர் வெற்றி செல்வன், துணை கமிஷனர் செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் கணபதி அத்திப்பாளையம் பிரிவு 19-வது வார்டு பொது மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
நிலுவை சம்பளம்
தூய்மை பணியாளர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கும் சங்க கூட்டமைப்பினர் அளித்த மனுவில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி 2016 முதல் 2017வரை நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோவை மாநகராட்சி யில் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.71 உயர்த்தப் பட்ட தினக்கூலி தற்போது வரை நிலுவையில் உள்ளது.
அதை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பொதுக்கழிவறை சீரமைப்பு
மக்கள் நீதிமய்யம் கட்சியினர் அளித்த மனுவில், மத்திய மண்ட லம் 67-வது வார்டு சித்தாபுதூர் சி.எம்.சி. காலனியில் உள்ள பொது கழிவறை பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளது. எனவே பொது கழிவறையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், மாநகராட்சி பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இரும்பு பெட்டிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆவின் பால் விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது இரும்பு பெட்டிகளை உடனே அகற்ற வேண்டும். இல்லை என்றால் மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்று நோட்டீஸ் வினியோகித்து வருகிறார்கள்.
எங்கள் வாழ்வாதாரத்தை கருதி இது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 53 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.