திருவள்ளூர்
ரூ.18 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் முன் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கரைகள் சரிந்து சேதம்
|திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் முன்னே தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, கொசஸ்தலை ஆற்றில் கலந்து, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம் வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, திருவாலங்காடு ஒன்றியம் இலுப்பூர், ஆற்காடுகுப்பம் பகுதியில் ஆற்றின் கரைகளை உடைத்து வெள்ள நீர் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்று தேங்கி விடுகிறது.
தடுப்பணை கட்டப்பட்டால் ஆற்று நீர் வீணாவது தடுக்கப்படும். மேலும், சுற்றி உள்ள 8 ஊர்களில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும். இலுப்பூர், ஆற்காடு குப்பம், ராமாபுரம், முத்துக்கொண்டாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 1,300 ஏக்கரிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கடந்த ஆட்சியில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தடுப்பணை கட்டப்பட்டது
இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இலுப்பூர்-ராமாபுரம் கிராமங்களுக்கு இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் பொதுப்பணித் துறையின் வாயிலாக ரூ.18 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்து, கொசஸ்தலையாற்றில் 230 மீட்டர் நீளம் 2 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. ஏறக்குறைய 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. குறிப்பாக திருத்தணியில் 2 தினங்களுக்கு முன்பு 13 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்போது இந்த தடுப்பணை வழியாக 700 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
கரைகள் சேதம்
இந்த தடுப்பணை இரு புறங்களிலும் கரையையோட்டி தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது, இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால் தடுப்பணையின் கரைகள் சேதமடைந்து ஒரு பக்கம் சரிந்து விழுந்துள்ளது. பயன்பாட்டிற்கு வரும் முன்னே தடுப்பணை கரைகள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த பகுதிகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.