தினத்தந்தி-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி - சென்னையில் தொடங்கியது
|தினத்தந்தி-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னை,
பிளஸ்-2 வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேர காத்திருக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்வான கல்வி கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் 'தினத்தந்தி' நாளிதழ் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் தினத்தந்தி-எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த ஆண்டுக்கான கல்வி கண்காட்சியை நேற்று தொடங்கி இருக்கிறது.
கல்வி கண்காட்சியை செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர்(தொடர்புகள்) ஆர்.நந்தகுமார், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சென்னை ராமாபுரம், திருச்சி வளாகம்) இயக்குனர் கே.கதிரவன், அமெட் பல்கலைக்கழகம் இணை வேந்தர் ஜி.திருவாசகம், ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் சுந்தர், வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடிஸ் இணை துணைவேந்தர் பாஸ்கரன், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ரித்திக் பாலாஜி, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் இணை துணைவேந்தர் கிருத்திகா, கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
சந்தேகங்களுக்கு தீர்வு
பிளஸ்-2 முடித்து என்ன மாதிரியான உயர்கல்வியை தேர்வு செய்து படிக்க வேண்டும்? என்ன படிப்புகளை படித்தால் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்க எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்?, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு என்ன படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும்? என்பது போன்று மாணவ-மாணவிகள், பெற்றோருக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த கல்வி கண்காட்சியில் பதில் கிடைக்கும்.
2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதில் கல்லூரி சார்பில் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு விளக்கங்களை அளிக்கின்றனர். மேலும் முதன்மை கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் எல்.கருணாமூர்த்தி, கல்வி ஆலோசகர்கள் டாக்டர் காயத்ரி சுரேஷ், டாக்டர் பக்தவச்சலம் ஆகியோரும் பங்கேற்று உயர்கல்வி குறித்த மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு கண்காட்சி அரங்கில் பதில் அளித்து வருகிறார்கள்.
பயனுள்ளதாக உள்ளது
இந்த கண்காட்சி குறித்து செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர்(தொடர்புகள்) ஆர்.நந்தகுமார் கூறுகையில், 'தினத்தந்தியுடன் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கண்காட்சியை இணைந்து நடத்துகிறோம். நல்ல வரவேற்பு இருக்கிறது. மாணவ-மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வியாபார நோக்கில் இல்லாமல், சமுதாயத்துக்கு ஏற்றவாறு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு தீர்வு கிடைக்கிறது. தீர்வும் இருக்கும், அதே நேரத்தில் தீர்ப்பும் மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கும்' என்றார்.
இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சென்னை ராமாபுரம், திருச்சி வளாகம்) இயக்குனர் கே.கதிரவன் கூறும்போது, 'கடந்த காலத்தில் நடந்ததை எதிர்காலத்துடன் இணைக்கும் இடமாக இந்த கண்காட்சி இருக்கிறது. உயர்கல்வியில் ஒரு சில துறைகள் மட்டும் இல்லை. சுமார் 3 ஆயிரத்து 500 தொழிற்கல்விகள் இருக்கின்றன. அதனை ஆய்வு செய்து பார்ப்பது என்பது கஷ்டம். அதற்கெல்லாம் ஒரு தீர்வு தான் இந்த கண்காட்சி. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கண்காட்சியை தினத்தந்தி நடத்துவது பாராட்டத்தக்கது' என்றார்.
முழு தகவல்கள்
அமெட் பல்கலைக்கழகம் இணை வேந்தர் ஜி.திருவாசகம் கூறுகையில், 'இந்த கண்காட்சியில் மாணவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான தெளிவை பெற முடியும். கம்ப்யூட்டர் சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய படிப்புகளை படிக்க அதிக செலவு செய்தால்தான் படிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அது தவறு குறைந்த கட்டணத்திலும் அது முடியும். தொழிற்சாலை தொடர்புடைய படிப்புகள் எவை? பாடத்திட்டங்கள் குறித்த முழு தகவல்கள் போன்றவற்றையெல்லாம் இந்த கண்காட்சியில்தான் தெரிந்து கொள்ள முடியும். இங்கு வந்த பிறகு உயர்கல்வியை தேர்வு செய்வதற்கான நல்ல தெளிவு கிடைக்கும்' என்றார்.
ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் சுந்தர் கூறும்போது, 'மாணவர்களின் திறன், தகுதிக்கு ஏற்றவாறு என்ன மாதிரியான படிப்புகளை தேர்வு செய்யலாம்? என்பதை இந்த கண்காட்சியின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள படிப்புகள் எவை? தொழில் முனைவோராக ஆகுவதற்கு எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்? என்பதை இந்த கண்காட்சியில்தான் தெரிந்துகொள்ள முடியும். புதுப் புது படிப்புகள் வந்து இருக்கின்றன. அந்த படிப்புகளையெல்லாம் இங்கு மட்டுமே மாணவ-மாணவிகளும், பெற்றோரும் அறிய முடிகிறது' என்றார்.
வாகன வசதி ஏற்பாடு
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். கண்காட்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு கோயம்பேடு(மாநில தேர்தல் அலுவலகம்), கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரில், பூந்தமல்லி(குமணன்சாவடி பஸ் நிறுத்தம்), போரூர் சந்திப்பு, பல்லாவரம் சிக்னல் ஆகிய 5 இடங்களில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.