< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி செய்தி எதிரொலி: கீழையூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க நடவடிக்கை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: கீழையூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
20 Feb 2023 12:45 AM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கீழையூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கீழையூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கு பாதை இல்லை

நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள மீனம்பநல்லூர் கிராமம் மெயின் ரோடு பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் யாரேனும் இறந்து விட்டால் இறுதி சடங்குகள் செய்ய அவர்களுடைய உடலை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரம் வயல் வழியாக இறந்தவர்கள் உடலை தூக்கி செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. வயல் வழியாக உடலை தூக்கி செல்பவர்கள் வயல் பாதையில் நிலை தடுமாறி கீழே விழும் ஆபத்தும் உள்ளது.

'தினத்தந்தி' செய்தி

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனம்பநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி இறந்தார். அவருடைய உடலை வயல் வழியாக தூக்கி இறுதி சடங்குகளை செய்தனர். அவருடைய உடலை வயல் வழியாக சிரமத்துடன் தூக்கி சென்றது தொடர்பான செய்தி கடந்த 17-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது.

இதன் எதிரொலியாக நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுரையின்படி கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து சுடுகாட்டுக்கு பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பேச்சுவார்த்தை

அப்போது சுடுகாட்டு பாதைக்கு செல்லக்கூடிய வயல்வெளி மீனம்பநல்லூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுப்புரத்தினம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் என விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுப்புரெத்தினம் சுடுகாட்டு பாதை அமைக்க வயல்வெளியில் இடம் தருவதாக கூறியதன் அடிப்படையில், அங்கு அறுவடை பணிகள் முடிந்த பிறகு அந்த பகுதியில் சுடுகாட்டு பாதை அமைத்து தரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். சுடுகாட்டுக்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து 'தினத்தந்தி' நாளிதழுக்கும், மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், சுடுகாட்டு பாதை அமைக்க வழி தந்தவருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்