< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் தேங்கிய மழைநீர் அகற்றம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

தினத்தந்தி
|
29 Sep 2023 1:36 PM GMT

அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கனகம்மாசத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பருவமழை காரணமாக கனகம்மாசத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அரசு பள்ளியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது.

இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் அனைவரையும் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமர வைத்து, தேர்வினை எழுத வைத்தனர். மாவட்ட நிர்வாகம் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும், பள்ளியில் மழை நீர் தேங்காதவாறு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமது நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருத்தணி தாசில்தார் மதன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளியில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றினர்.

மேலும் செய்திகள்