< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
26 April 2023 9:15 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்து அபாயம்

அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் மிகவும் வளைவான பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ரோட்டோரம் தவறி விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இரவிலும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச்சுவர் இருப்பது தெரியும் வகையில் அதில் ஒளிரும் வண்ணப் பெயிண்டுகள் பூச வேண்டும்.

அருள், புதுப்பாளையம்.

வழிகாட்டி பலகையில் குழப்பம்

ஈரோடு வில்லரசம்பட்டியில் இருந்து கருவில்பாறைவலசு செல்லும் வழியில் சுடுகாடு அருகே ஊர் வழிகாட்டி பலகை உள்ளது. ஆனால் இதன் மீது தனியார் நிறுவனத்தினர் விளம்பரம் எழுதி வைத்து மறைத்து உள்ளனர். இதனால் அந்த பலகையில் எந்த ஊர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல் அங்கு புதிதாக செல்பவர்கள் குழப்பம் அடைகின்றனர். வழிகாட்டி பலகையில் விளம்பரம் செய்வதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சபாகா, கருவில்பாறைவலசு.

குண்டும், குழியுமான ரோடு

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் பள்ளிக்கூடத்தையொட்டி செல்லும் ரோடு பல நாட்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ரோட்டில் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

தனுஷ், ஈரோடு.

பஸ்கள் நின்று செல்லுமா?

அந்தியூர் சத்தி ரோட்டில் உள்ள நகலூர் பிரிவு அருகே வெள்ளையம்பாளையம் பிரிவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் பஸ் ஏற முனியப்பம்பாளையம் அல்லது நகலூர் பிரிவு செல்ல சுமார் ½ கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி வெள்ளையம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சண்முகவேல், வெள்ளையம்பாளையம் பிரிவு.

குவிந்துள்ள குப்பைகள்

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதிக்கு செல்லும் வழியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ரோட்டில் ஆங்காங்கே சில இடங்களில் குப்பைகள் சிதறியும் காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அந்த ரோட்டில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

பிரபு, மாணிக்கம்பாளையம்.

சீரமைக்க வேண்டும்

கோபியில் குப்பம்மாள் லேஅவுட் காலனி ரோடு செல்கிறது. அந்த ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். சிலர் கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஸ்வம், கோபி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் 2-வது தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

வேலு, வீரப்பன்சத்திரம்.

ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முகம் சுழித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு சரிசெய்யப்படுமா?

ராஜ், ஈரோடு.

Related Tags :
மேலும் செய்திகள்