ஈரோடு
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி'க்கு பாராட்டு
ஈரோடு பெரியார் நகரில் உள்ள ரோட்டில் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி சென்று விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சூரியநாராயணன், பெரியார் நகர், ஈரோடு.
ஆபத்தான குழி
ஈரோடு மேட்டூர் ரோட்டில் முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில் எதிரே உள்ள பகுதியில் குழி ஒன்று காணப்படுகிறது. இந்த குழி இருப்பது தெரியாமல் அதில் சிக்கி வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல், ஈரோடு.
ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் அருகே பெரிய உள்ளேபாளையத்தில் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகியதாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், விவசாயிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். அந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அனைவரும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
ரமேஷ், பெரிய உள்ளேபாளையம்.
மின்கம்பங்களை சுற்றி மரங்கள்
கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரம் அருகே உள்ள அனைத்து மின்விளக்கு கம்பங்களை சுற்றியும் சீமை கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் போதிய வெளிச்சம் இன்றி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
ராசு, சாமிநாதபுரம்.
மூடப்படாத கால்வாய்
பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஈரோடு ேராட்டில் உள்ள சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் தவறி கால்வாய்க்குள் விழுந்து ஆபத்துகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை கால்வாயை மூடி வைக்க அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
ராஜ், கருமாண்டிசெல்லிபாளையம்.
புகைமூட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு
சித்தோடு பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தைகடை மேடு யூசுப் நகர் 4-வது வார்டு பகுதி மக்களிடம் இருந்து பேரூராட்சி சார்பில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இந்த குப்பைகள் அந்த பகுதியில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் புகைமூட்டமாக காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை எரிக்க வேண்டும்.
கலைச்செல்வன், சித்தோடு.
ஒலிபெருக்கிகளால் மாணவர்கள் சிரமம்
டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூரில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிரதான சாலையிலும், 4 முனை சந்திப்பு சாலையிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு அதிக சத்தம் எழுப்பி வருகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், கடைக்காரர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளின் பயன்பாட்டை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகைமணி, பங்களாப்புதூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அந்தியூர் தொகுதி நஞ்சைபுளியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஆசாரிமேடுவில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே அடைப்பை நீங்கி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஏ.ஜி.அபிராமன், ஆசாரிமேடு