< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
13 April 2023 2:25 AM IST

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வர்ணம் பூசப்படுமா?

ஈரோடு பெரியார் நகர் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வேகத்தடை இருப்பது தெரியாததால் இரவு நேரத்தில் செல்லும் கார், வேன், இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு வருகிறது. உடனே அந்த ரோட்டில் வெள்ளை நிற வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.சூரியநாராயணன், ஈரோடு.

வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலம் அருகே உள்ள குத்தியாலத்தூர் என்ற மலைக்கிராமத்தில் இருந்து திண்ணியூர் வழியாக சின்ன சாலட்டி வரை 6 கி.மீ. தூரம் தார்சாலை அமைப்பதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் பணியை இன்னும் தொடங்கவில்லை. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். விரைவில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

வினோத் ராஜேந்திரன், குத்தியாலத்தூர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

ஈரோடு மாநகராட்சி ஈ.பி.பி.நகர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள 4 ரோடு சந்திப்பில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே விபத்துகளை தடுக்க நால் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்படுமா?

பாலு, ஈ.பி.பி.நகர், ஈரோடு.

டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே நால்ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. உடனே அந்த ரோட்டில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

கதிர், கொண்டையம்பாளையம்.

இடவசதியின்றி தபால் அலுவலகம்

சித்தோடு தபால் அலுவலகம் நகர்ப்புறத்தையொட்டி உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் செயல்படுகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சித்தோடு தொலைபேசி நிலையம் அலுவலகத்தின் உள்ளே இடம் காலியாக உள்ளது. அங்கு கட்டிடம் கட்டி தபால் அலுவலகம் செயல்பட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

கணேசன், சித்தோடு.

விஷப்பூச்சிகள் தொல்லை

நம்பியூர் பேரூராட்சி 5-வது வார்டுக்கு உள்பட்ட செரங்காடு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சீமைக்கருவேல மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் வீதிகளிலும், வீடுகளிலும் நுழைந்து பொதுமக்களுக்கு தொல்லை தருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜ், செரங்காடு.

வீணாகும் குடிநீர்

அந்தியூர் தேர் வீதியில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தேர் நிறுத்துமிடத்தில் உள்ள குடிநீர் குழாயில் திறப்பான் (டேப்) இல்லை. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வீணாகி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குழாயில் திறப்பான் பொருத்தி வீணாகும் குடிநீரை பாதுகாக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

அருள், அந்தியூர்.

அடிக்கடி மின்தடை

டி.என்.பாளையம் அருகே கொண்டயம்பாளையம் கிராமத்தில் உள்ள மெயின் ரோடு வழியாக மேலே செல்லும் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடொன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தீ விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடொன்று உரசி செல்வதை மின்வாரிய அதிகாரிகள் தடுப்பார்களா?

ராம், டி.என்.பாளையம்.


தெருவிளக்குகள் எரியவில்லை

சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 2-வது வார்டான அண்ணாமலை கோட்டை பகுதிகளில் தெருவிளக்குகள் எதுவும் எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் உள்ளிட்டோர் அந்த வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்குகள் எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்.ஆனந்தராஜ், அண்ணாமலை கோட்டை

பஸ்கள் நின்று செல்லுமா?

பெருந்துறை-சென்னிமலை சாலையில் உள்ள எல்லமேடு முக்கிய சந்திப்பாக உள்ளது. மேலும் சிப்காட், வெள்ளோடு மற்றும் ஈங்கூரின் மத்திய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு ஒரு சில பஸ்கள் நின்று செல்வதில்ைல. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எல்லமேடுவில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

ஆர்.அர்ஜுனன், முத்துநகர், எல்லமேடு.

Related Tags :
மேலும் செய்திகள்