< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
26 March 2023 9:26 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு பாராட்டு

கோபி-கள்ளிப்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிளை தபால் நிலையம் அருகே குடிநீர் குழாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை சரிசெய்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ராஜ.சக்திதேவேந்திரகுமார், பா.நஞ்சகவுண்டன்பாளையம்.

பாம்புகள் படையெடுப்பு

கோபியில் வாஸ்து நகருக்கு அடுத்து சக்தி சாந்தி நகர் உள்ளது. அங்குள்ள கிருஷ்ணன் வீதியில் ரோடு ஓரமாக செடி, கொடிகள் புதர்போல் அடர்த்தியாக வளர்ந்து உள்ளன. இந்த புதரில் இருந்து பாம்புகள் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வந்துவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிருஷ்ணன் வீதியில் ரோட்டின் ஓரம் வளர்ந்துள்ள செடி-கொடிகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாதன், கோபி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டான மாலா கோவில் வீதியில் சீரமைப்பு பணிக்காக சாக்கடை வடிகால் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் வடிகால் சீரமைக்கப்படாததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ இடையூறாக உள்ளது. உடனே சாக்கடை வடிகாலை சீரமைக்க ஆவன செய்யப்படுமா?

கார்த்திகேயன், கூகலூர்.

கடும் துர்நாற்றம்

சித்தோடு நடுப்பாளையம் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள பனங்காட்டு குட்டையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த கழிவுகளால் குட்டை பகுதிக்குள் தண்ணீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. உடனே பேரூராட்சி நிர்வாகம் குட்டையோரம் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

கலைச்செல்வன், சித்தோடு.

குவிந்துள்ள குப்பைகள்

ஈரோடு-கரூர் ரோட்டில் சின்னியம்பாளையத்தில் குப்பைகளை சிலர் கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

ராஜா, ஈரோடு.

வீணாகும் குடிநீர்

ஈரோடு பவானி மெயின் ரோட்டில் உள்ள மூலப்பட்டறையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக ரோட்டில் குளம் போல் தேங்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். உடனே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டு்ம்.

பழனிசாமி, மூலப்பட்டறை, ஈரோடு

Related Tags :
மேலும் செய்திகள்