< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
22 March 2023 9:16 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு பாராட்டு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே இருக்கும் ஒரு குடிநீர் குழாய், சாக்கடையை நோக்கி இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டார்கள். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் படத்துடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் குடிநீர் குழாயை சரியான திசையில் மாற்றி அமைத்துள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

அருள், அந்தியூர்


வடிகால் வேண்டும்

கோபிசெட்டிபாளையம் கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 8-வது வார்டான கிரி நகரில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோடுகளில் ஓடுகின்றன. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளன. எனவே எங்களுக்கு சாக்கடை வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராசு, கூகலூர்

ரோட்டில் பள்ளம்

அந்தியூரில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் தவுட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பள்ளத்தை மூட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ரவீந்திரன், அந்தியூர்

போக்குவரத்துக்கு இடையூறு

கோபி-கள்ளிப்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிளை தபால் நிலையம் அருகே குழாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே குழாயில் ஏற்பட்டு்ள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராஜ.சக்திதேவேந்திரகுமார், பா.நஞ்சகவுண்டன்பாளையம்

விளக்கு ஒளிரவில்லை

சித்தோடு நால் ரோட்டில் அமைந்துள்ள உயர் மின் கோபுரத்தில் உள்ள விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே மின்விளக்கு எரிய செய்ய ஆவன செய்யப்படுமா?

உதயநிதி, சித்தோடு

பாதியில் நிற்கும் பணி

கோபிசெட்டிபாளையம் ஈரோடு மெயின் ரோட்டில் ராஜ வீதியில் கான்கிரீட் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் போக்குவரத்துக்கு தினமும் இடையூறு ஏற்படுகிறது. எனவே விரைந்து பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

எச்.பரணீதரன், கோபிசெட்டிபாளையம்

மோசமான ரோடு

கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் ரோட்டில் மேட்டுவளவு என்ற இடத்தில் ரோடு வளைவாக செல்கிறது. மேலும் அந்த ரோட்டில் மண், கல் கிடக்கின்றன. அதனால் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த ரோட்டை விரைந்து செப்பனிட வேண்டும்.

விஸ்வம், கோபி

Related Tags :
மேலும் செய்திகள்