ஈரோடு
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இருண்ட பஸ் நிலையம்
கடம்பூர் மலைக்கிராமத்தில் உயர்கோபுர மின்விளக்கு, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பஸ் நிலையம் இருண்ட நிலையில் காணப்படுகிறது. பஸ் ஏற வரும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கடம்பூர் பஸ் நிலைய பகுதியில் மின் விளக்குகள் ஒளிர செய்து இருண்ட நிலையில் உள்ள பஸ் நிலையத்தை ஒளிபெற செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், கடம்பூர்.
பஸ்கள் நிற்க வேண்டும்
கோவை, திருப்பூரில் இருந்து சேலம் செல்லும் சில பஸ்கள் சித்தோடு வருவதில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை, சேலம் போன்ற ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சித்தோட்டில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
கலைச்செல்வன், சித்தோடு.
திறந்தநிலையில் குடிநீர் தொட்டி
கோபியில் வாஸ்து நகர் அருகே பெருமாள் சாமி நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீதியில் கடந்த 2 மாதங்களாக தரைமட்ட குடிநீர் தொட்டியின் கான்கிரீட் சிலாப்புகள் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்தோ அல்லது வாகனங்களிலோ செல்பவர்கள் தொட்டிக்குள் தவறிவிழுந்து பேராபத்துகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் குடிநீர் தொட்டியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஸ்வம், கோபி.
ஆபத்தான குழி
கோபி தியேட்டர் வீதியில் ஈரோட்டுக்கு செல்லும் இணைப்பு ரோடு அருகே குழி ஏற்பட்டுள்ளது. இதில் தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் குழிக்குள் சிக்கி தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். குழியை மூடி தண்ணீர் தேங்குவதை நிறுத்தவும், விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாதன், கோபி.
பக்தர்கள் அவதி
கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சமேத விஸ்வேஸ்வரர் கோவில் முன்புள்ள ரோட்டின் இருபுறமும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் ரோடு ஜல்லி, மண் கலந்த ரோடாக மாறியுள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நேரில் ஆய்வு செய்து ரோட்டை சீரமைக்க முன்வர வேண்டும்.
ராஜேஷ், கோபி.
மாணவ-மாணவிகள் சிரமம்
பவானி ஒலகடம் அருகே உள்ள வெடிக்காரன்பாளையம் கிராமத்தில் இருந்து அம்மன்பாளையம் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாதபடி மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வெடிக்காரன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும் செல்லும் மாணவ-மாணவிகள், அந்த வழியாக வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
நல்லசாமி, வெடிக்காரன்பாளையம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு மூலப்பட்டறை காந்திபுரம் மெயின் வீதியில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கடந்த பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
டி.கதிர்வேல், மூலப்பட்டறை, ஈரோடு.