< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
5 March 2023 8:49 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுப்பிக்கவேண்டும்

சித்தோட்டில் இருந்து பவானி மற்றும் பெருந்துறை செல்லும் சாலைகள் புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் தற்போதே விரிசல்கள் மற்றும் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடனும், பயத்துடனும் செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை உடனே புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலை, சித்தோடு

ரெயில் பயணிகள் அவதி

ஈரோடு ரெயில் நிலையம் முன்பு சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிவிட்டு, சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.என்.பாஷா, ஈரோடு.

தெருவிளக்குகள் ஒளிரவில்லை

சித்தோடு நால்ரோடு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் இரவு நேரங்களில் ஒளிா்வதில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. உடனே தெருவிளக்குகளை ஒளிர செய்யவும், மேலும் 4 பகுதிகளிலும் வேகத்தடை அமைத்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வன். சித்தோடு

டவுன் பஸ் வசதி

சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை. அந்தியூர் செல்ல குறிப்பிட்ட நேரம் மட்டும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கால விரயம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது. எனவே சத்தியமங்கலத்தில் இருந்து டி.என்பாளையம், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூருக்கு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

கவின்குமார், அந்தியூர்

நிழற்குடை தேவை

ஈரோடு ரெயில் நிலையத்தின் உள்பகுதியில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் மாநகரப் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. சென்னிமலை, வெள்ளோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், ரெயில் நிலையத்துக்கு வெளியிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வருகின்றன. அங்கு நின்றிருந்த மரங்கள் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்டுவிட்டன. இதனால் ரெயில் நிலையத்துக்கு வெளியே நிழல் இல்லாததால் வெயிலில் பஸ்களுக்காக பயணிகள் கால் கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபு, சென்னிமலை

ஆபத்தான குழி

கோபி வாய்க்கால் ரோட்டுக்கு செல்லும் ரோட்டில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் குழி உள்ளது. இக்குழி இருப்பது பகலில் தெரியும். ஆனால் இரவில் சரியாக தெரியாது. குழியை மூடவில்லையென்றால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

நாதன், கோபி

Related Tags :
மேலும் செய்திகள்