ஈரோடு
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடைகள் வேண்டும்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே 3 சாலைகள் சந்திக்கும் பிரிவு உள்ளது. இந்த 3 பிரிவுகளிலும் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பவானி நெடுஞ்சாலைத்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் வேகத்தடை அமைக்க ஆவன செய்வார்களா?
மாதேஷ், அந்தியூர்.
ரோடு போடுவார்களா?
திண்டல் சக்தி நகரில் ரோடு போடுவதற்காக ஆயத்த பணிகள் தொடங்கின. ஆனால் ஜல்லிகள் கொட்டி சரி செய்த பின்னர் ரோடு போடவில்லை. இதனால் அந்த பாதையில் நடந்து செல்ல கூட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சக்தி நகரில் விரைந்து ரோடு போட ஆவன செய்யவேண்டும்.
பொதுமக்கள், திண்டல்.
பழுதடைந்த பாதை
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் சாவடிப்பாளையம் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் உள்ள பாதை குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். 4 சக்கர வாகனங்களும் தடுமாறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த ரோட்டை சீரமைக்க ஆவன செய்யவேண்டும்.
பொதுமக்கள், சாவடிப்பாளையம்.
சேதமடைந்த சிமெண்டு சாலை
ஈரோடு நாடார்மேடு நேரு வீதியில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளாக அங்கு சாலை சீரமைக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக இருப்பதால் முதியவர்கள் நடந்து செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும், சாக்கடையின் ஓரங்களில் புதர் மண்டி கிடக்கிறது. எனவே அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும்.
நவாஸ்கான், நாடார்மேடு.
விபத்து ஏற்படும் அபாயம்
ஈரோடு அடுத்துள்ள சோலாரில் கரூர் மெயின் ரோட்டின் ஓரம் ஆங்காங்கே குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதில் தீயும் வைத்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டு ஓரம் குப்பை கொட்டுவதையும், அங்கு தீ வைப்பதையும் தடுக்கவேண்டும்.
தமிழ்வேல், சோலார்.