< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
20 Feb 2023 3:36 AM IST

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சீரமைக்க வேண்டும்

கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்புள்ள கோபி-சத்தியமங்கலம் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டு்த்தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே அந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

வாகன ஓட்டிகள் அவதி

கஸ்பாபேட்டை-மொடக்குறிச்சி சாலையில் பொட்டிநாயக்கன்வலசு அருகே உள்ள வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் காணப்படுகிறது. இதில் ஒருபுறம் உள்ள தடுப்புச்சுவர் ரோட்டையொட்டி காணப்படுகிறது. இதனால் ரோடு குறுகியதாக மாறி உள்ளதால் பஸ், லாரிகள், கன்டெய்னர் லாரிகள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடனே அந்த தடுப்புச்சுவரை இடித்துவிட்டு வாகனங்கள் செல்லும் வகையில் புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.கிருஷ்ணன், செங்கரைப்பாளையம்.

சரி செய்யப்படுமா?

அந்தியூர் தேர்வீதி கெட்டி விநாயகர் கோவில் அருகே பாலம் உள்ளது. இந்த பாலத்தை சீரமைப்பதற்காக அந்த பகுதியில் இருந்த உயர்கோபுர மின் விளக்கு அப்புறப்படுத்தப்பட்டது. அவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட கோபுர மின்விளக்கு குப்பையில் வீசப்பட்டு உள்ளது. இந்த கோபுர மின் விளக்கை அதே இடத்தில் வைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

குழியை மூட வேண்டும்

கோபி பஸ் நிலையம் அருகே வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கி அருகே சாலை சீரமைப்பு பணி நடைபெற்றது. இதற்காக அங்கு குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் குழிக்குள் விழுந்து காயம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

ரோடு சீரமைக்கப்படுமா?

கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் அண்ணா பாலம் எதிரில் முத்துஷா வீதி ரோடு செல்கிறது. அந்த ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்து காணப்படும் அந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.


தரைப்பாலம் அமைக்கப்படுமா?

அந்தியூர் பெரியார் நகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மழைக்காலத்தில் ஏரி நிரம்பி அந்த பகுதியில் ஓடையில் அதிக அளவில் தண்ணீர் சென்றது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் இடிக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் தரைப்பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் ஓடையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மேலும் சாக்கடையில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. எனவே மீண்டும் அந்த ஓடையில் தரைப்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

Related Tags :
மேலும் செய்திகள்