< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
8 Feb 2023 10:10 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கொசுக்கள் தொல்லை

பவானி தொட்டிபாளையம் அருகே புதுகாடையம்பட்டியில் உள்ள சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கொசுக்கள் பெருகிவிட்டன. நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பொது கழிப்பிடமும் பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே வடிகாலை தூர்வாரி கழிவுநீர் செல்லவும், கழிப்பிடத்தை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுகாடையம்பட்டி.

குவிந்துள்ள குப்பைகள்

ஈரோடு பெரியார்நகர் வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே ஏ.பி.சி. ஆஸ்பத்திரி பின்புறம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு தேவையற்ற குப்பைகளை கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள். புல் புதர் மண்டி கிடக்கிறது. அங்கு தேங்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புதராகவும், மறைவிடமாகவும் இருப்பதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், பெரியார்நகர்.

ஓடையில் ஆக்கிரமிப்பு

கோபியில் இருந்து மேட்டு வளவு செல்லும் ரோட்டில் (பாரியூரை இணைக்கும் ரோடு) கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. அந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நாதன், மேட்டுவளவு.

சுகாதாரம் பாதிப்பு

கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் இருந்து கரட்டுர் பிரிவு வருகிறது. அங்கு ரோட்டோரம் 4 இடங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

விஸ்வம், பாரியூர்.

துர்நாற்றம் தாங்கவில்லை

ஈரோடு சூரம்பட்டி தபால் அலுவலகம் அருகே பாதாள சாக்கடை நிரம்பி மூடியில் இருந்து கழிவு நீர் வெளியேறி பாதையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. காற்று மாசுபாடும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதை நேரில் வந்து பார்த்து உடனே செய்யவேண்டும்.

பொதுமக்கள், சூரம்பட்டி.

ஆபத்தான மேல்நிலை தொட்டி

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் உப்புபள்ளம் பள்ளிக்கூடம் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ்தளம் மிகவும் பழுதாகி விரிசல் அடைந்து கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ள இந்த தொட்டியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர ஆவன செய்யவேண்டும்.

பொதுமக்கள், கொத்தமங்கலம்

Related Tags :
மேலும் செய்திகள்