ஈரோடு
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின் கம்பம்
அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் உயரத்தை கூட்டுவதற்காக தனியாக இரும்பினாலான சேனல் அமைக்கப்பட்டது. தற்போது இரும்பிலான சேனல் சாய்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது. இது சாய்ந்து விழுந்தால் அந்த பகுதியில் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசன், அந்தியூர்.
பஸ்கள் இயக்க வேண்டும்
சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை. அந்தியூர் செல்ல குறிப்பிட்ட நேரம் மட்டும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி சென்று அங்கிருந்து பஸ்கள் மாறி அந்தியூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே சத்தியமங்கலத்தில் இருந்து டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூருக்கு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சத்தியமங்கலம்.
தொட்டி மூடப்படுமா?
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் பிரிவில் இருந்து சுண்டப்பாளையம் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் கேட் வால்வை திறந்துவிடுவதற்காக தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தொட்டியின் மீது கான்கிரீட் சிலாப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த சிலாப்புகள் முறையாக மூடப்படவில்லை. இதனால் தொட்டியின் மீது இடைவெளி உள்ளது. சிறுவர்கள், சிறுமிகள், வயதானவர்கள் மற்றும் கால்நடைகள் அந்த பகுதி வழியாக செல்லும்போது தவறி தொட்டிக்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே தொட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பழுதடைந்த சாலை
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் பச்சைமலைக்கு செல்லும் பிரிவு ரோடு வருகிறது. அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குண்டும், குழியுமான ரோடு
கோபியில் மெயின் ரோட்டில் புதுப்பாளையம் என்னும் இடத்தில் வடக்கே பாரியூர் செல்லும் ரோட்டில் குழி தோண்டப்பட்டு அது மூடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ரோடு சரியாக மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அந்த ரோட்டில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுப்பாளையம்.
ரோட்டில் சுற்றித்திரியும் குதிரை
அந்தியூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் ரோட்டில் சுற்றி திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சில சமயங்களில் குதிரைகள் காலால் உதைக்கின்றன. இதனால் ரோட்டில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்லவேண்டிய நிைல உள்ளது. எனவே ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், அந்தியூர்.
கழிப்பறை திறக்கப்படுமா?
பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி 11-வது வார்டுக்கு உள்பட்ட புதுக்காடையம்பட்டியில் பெண்களுக்காக தனி கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. பராமரிப்பு பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பொதுக்கழிப்பிடம் பூட்டப்பட்டது. ஆனால் இதுவரை பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கழிப்பறையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி