< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
18 Jan 2023 10:19 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ்கள் நிற்பதில்லை

ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் நகர பஸ்கள் ஜோசப் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஜோசப் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்திலிங்கம், கே.கே.நகர், சென்னிமலை சாலை.

ஆபத்தான மின்கம்பம்

ஈரோடு குமரன்நகரில் ரோட்டோரமாக பாதாள சாக்கடை அமைக்க மண் தோண்டப்பட்டது. ஆனால் மண் அகற்றப்படாமல் இருப்பதால் அதில் புற்கள் வளர்ந்து அது மின்கம்பத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் பாக்சை மூடியபடி காணப்படுகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தின் மீது வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பாலகிருஷ்ணன், குமரன்நகர், ஈரோடு.

தூர்வாரப்படுமா?

ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகியம்மாள் லே-அவுட் மற்றும் ஜெகன் வீதியில் சாக்கடை கால்வாய் கடந்த பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கொசு தொல்லை அதிகமாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் பலருக்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய்களும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

புகை மூட்டம்

ஈரோடு கரூர்-ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம் செல்லும் வழியில் சாலையோரத்தில் குப்பை எரிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு அடுத்தடுத்து சாலையோரத்தில் குப்பையை குவித்து தீ வைக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை ஓரத்தில் குப்பை குவிப்பதையும், தீ வைத்து புகை மூட்டம் ஏற்படுத்துவதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சின்னியம்பாளையம்.

வேகத்தடை அமைப்பார்களா?

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் ஊஞ்சலூர் உள்ளது. இங்குள்ள பஸ்நிறுத்தத்தில் ரோடு வளைவாக காணப்படுகிறது. அதனால் அருகே வரும் வரை எதிரே வரும் வாகனம் தெரியாது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் பஸ் நிறுத்தம் அருகேயே தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. எனவே ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

பழனி அரசன், கொடுமுடி.

குடிநீர் வேண்டும்

ஈரோடு பஸ்நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே தண்ணீர் தொட்டி வைக்க்கப்பட்டு இருந்த இடங்களும் மாறிவிட்டன. அதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தாகத்துக்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குறைந்தது 3 இடங்களிலாவது சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரை தொட்டியில் வைக்க ஆவன செய்ய வேண்டும்.

ரங்கநாயகி, ஈரோடு.

பாதை மாறும் பஸ்கள்

ஈரோட்டில் இருந்து கரூர், திருச்சி செல்லும் பஸ்கள் கருமாண்டம்பாளையத்தில் இருந்து கீழ்ரோடு, மேல்ரோடு என 2 பாதைகள் வழியாக செல்கின்றன. இதில் காரணாம்பாளையத்திலும், வெங்கம்பூரிலும் ரெயில்வே கேட் இருப்பதால் கீழ்ரோட்டில் செல்லவேண்டிய சில அரசு பஸ்களும் மேல்ரோடு வழியாக அதாவது நடுப்பாளையம், தாமரைப்பாளையம் வழியாக சென்றுவிடுகின்றன. இதனால் கொளாநல்லி, கருங்கரடு, ஊஞ்சலூர், காசிபாளையம், வெங்கம்பூர் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் பாதை மாறாமல் உரிய பாதையில் செல்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஞானவேல், கொடுமுடி.

பாராட்டு

அந்தியூர் அருகே உள்ள ஓசப்பட்டியில் இருந்து வெள்ளாளபாளையம் செல்லக்கூடிய இணைப்பு சாலையில் நீரோடை பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் மண் கொட்டி தற்காலிகமாக போக்குவரத்துக்காக சரிசெய்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

முருகன், வெள்ளாளபாளையம்.

Related Tags :
மேலும் செய்திகள்