ஈரோடு
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மோசமான ரோடு
கோபி நாகர்பாளையம் கலிங்கியம் அருகே சென்னியப்பா நகருக்கு செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
மூடப்படாத கிணறு
பவானிைய அடுத்த மயிலம்பாடி கிராமம் சாணார்பாளையம் காலனியில் ஓம்காளியம்மன் கோவில் அருகே 50 அடி ஆழமுடைய பொதுக்கிணறு உள்ளது. முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் இந்த கிணற்றின் மேல் கம்பி வலை அமைக்கப்படவில்லை. அதன் அருகே விளையாடும் சிறுவர்-சிறுமிகள் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட வாய்ப்பு உள்ளது. உடனே அந்த கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளியப்பன், சாணார்பாளையம் காலனி
சாக்கடையில் உடைப்பு
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சங்கங்கூரை அங்கன்வாடி மையம் அருகே கலந்து வருகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே பாதாள சாக்கடையில் ஏற்பட்டு்ள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முத்தம்பாளையம்
சீரமைக்கப்படுமா?
அந்தியூர் பிரம்மதேசம் கிராமம் பெத்தாரண்ணன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக கால்வாய் இடிக்கப்பட்டது. ஆனால் பணி முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வளைவில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வேகத்தடை அமைக்கவும், கால்வாயை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், பிரம்மதேசம்
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ல.கள்ளிப்பட்டி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உடனே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ல.கள்ளிப்பட்டி
கால்வாய் அமைக்க வேண்டும்
சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டோரம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உடனே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், சென்னிமலை