ஈரோடு
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை அமைக்க வேண்டும்
புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. திரையரங்கம் முதல் வி.ஆர்.டி. மில் செல்லும் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு புதிதாக சாலை அமைக்க வேண்டும்.
பத்மகுமார், புஞ்சை புளியம்பட்டி.
சாக்கடை தூர்வாரப்படுமா?
பவானி தொகுதிக்கு உள்பட்ட ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் பல மாதங்களாக சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஒலகடம்.
தேங்கியுள்ள குப்பை
கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் மொடச்சூர் பாலம் வருகிறது. இந்த பாலத்தின் ஓரமாக மலை போல் குப்பைகள் தேங்கி உள்ளன. புதர்போல் காணப்படும் குப்பை குவியலில் இருந்து பாம்புகள் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மொடச்சூர் பாலம் அருகே உள்ள குப்பைகளை அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், மொடச்சூர்.
பராமரிப்பில்லாத பூங்கா
கோபியில் வாஸ்து நகருக்கு அருகே உள்ள சக்தி சாந்தி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. காலையிலும், மாலையிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பூங்காவில் உள்ள புற்கள் செடிபோல் உயரமாக வளர்ந்துவிட்டன. இதனால் சிறுவர்களால் விளையாட முடியவில்லை. மேலும் விஷ பூச்சிகளும் செடி மறைவில் பதுங்கும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவில் உள்ள புற்களை வெட்டி சீரமைக்க வேண்டும்.
விஸ்வம், கோபி.
சுகாதார பாதிப்பு
கோபியில் இருந்து நாதிபாளையம் செல்லும் ரோட்டில் கலராமணி என்னும் இடத்தில் ரோட்டோரம் 2 இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் காற்று பலமாக வீசும்போது குப்பை துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மேல் படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், நாதிபாளையம்.
அழிந்த பெயர் பலகை
அந்தியூர் துணை மின்நிலையத்தில் அதற்கான பெயர் பலகை உள்ளது. இந்த பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அழிந்து வெறும் பலகை மட்டுமே பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அரசு துறையின் பெயர் பலகை இவ்வாறு இருப்பது முறையாக இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெயர் பலகையை புதுப்பித்து எழுதி வைக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் ஊராட்சி ஒன்றியம் நல்லகட்டிபாளையத்தில் மலையப்பாளையம்-அவினாசி சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே பள்ளத்தை சீரமைப்பார்களா?
பொதுமக்கள், நல்லகட்டிபாளையம்.