< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
7 Dec 2022 9:40 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த கான்கிரீட்

பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் சிந்தாமணி தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இதிலுள்ள கான்கிரீட் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே கான்கிரீட் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருவேங்கடம்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் சிவன் கோவில் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. காற்று வீசும்போது குப்பைகள் பறந்து சென்று அந்த வழியாக செல்பவர்களின் கண்ணில் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.

பஸ்கள் நின்று செல்லுமா?

அந்தியூர் அருகே புதுமேட்டூரில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த நிறுத்தத்தில் கோபியில் இருந்து இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இரவு நேரங்களிலும் டவுன் பஸ்கள் அங்கு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுமேட்டூர்.

வேகத்தடை வேண்டும்

ஈரோடு அருகே உள்ள பரிசல் துறையில் இருந்து திண்டல் வரை செல்லும் ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. உடனே அந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

மின்விளக்கு வசதி

டி.என்.பாளையம் அருகே புஞ்சைதுறையம்பாளையம் தேவாலயம் பகுதியில் பெண்கள் கழிப்பிடம் உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு சரியாக எரியவில்லை. இதனால் பெண்கள் சிரமப்படுகின்றனர். உடனே வேறு மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைதுறையம்பாளையம்.

ரோடு சீரமைக்கப்படுமா?

ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதியில் உள்ள ரோடு ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இது தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மணலி கந்தசாமி வீதி, வெண்டிபாளையம்.

வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்திரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் குழாய், மின்சார கேபிள், டெலிபோன் கேபிள் உள்ளிட்டவை பதிக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால் இந்த பணிகள் ஒருங்கிணைப்புடன் செயல்படாததால் மீண்டும், மீண்டும் வேலை செய்த வண்ணம் உள்ளனர். பணிகள் முடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகிறார்கள். எனவே பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன் நாராயணன், ஈரோடு.

Related Tags :
மேலும் செய்திகள்